ஸ்ரத்தா நாடகக் குழுவினரை யாராவது உசுப்பி விட்டார்களோ என்னவோ, தெரியவில்லை. தமிழ் மேடை நாடகத்தை இன்னும் சுவாரசியமாக்க ஏதாவது பண்ணுங்கள் என்று சொல்லியிருந்தாலும் சொல்லியிருப்பார்கள்.
கதை வசனம் எழுதி எழுதி அலுத்த கே.பாலசந்தரிடம், ""சும்மா ஒரு நல்ல கதை ஐடியா மட்டும் சொல்லுங்க, மிச்சத்தை நாங்க பாத்துக்கறோம்...'' என்று சொல்லியிருப்பார்கள் போல. இத்தனை ஜாலியாக ஒரு நாடகத்தைத் துவக்கி அதை மெல்ல மெல்ல நகர்த்தும் விதம் இருக்கிறதே, அதை ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்போதுதான் மேடையில் பார்க்கிறோம்.
நாடகம் சீரியஸ் பாதையில் சற்றுப் பயணம் செய்ய நேரும்போதும்கூட, அதை சர்க்கரை பூசிய கசப்பு மருந்து மாதிரி, சிரிப்பு சாயத்தில் முக்கி எடுத்து வழங்குகிறார்களே, அது எத்தனை முக்கியெடுத்தாலும் போகாத சாயம்!
தன் சிநேகிதிகள் தர்ஷனிக்கும் ரியாவுக்கும் "பாய்-ஃபிரண்ட்' இருப்பது போல், தனக்கும் இல்லையே என்று ஏங்கும் சந்தியா (ஷாலினி விஜயகுமார்) தான் நாடகத்தின் அச்சாணி, ஆணிவேர் எல்லாம். ஓர் இடத்திலாவது மிகையாகச் செய்திருக்க வேண்டுமே... ஊஹும்... அப்பட்டமான இயற்கையான நடிப்பு. அதற்கு ஏற்ற குரல் வளம். ""பாய்-ஃபிரண்ட் வேணும்னா கொஞ்சம் அழகாயிருக்கணும்...'' என்று அழகான சிநேகிதி தர்ஷனி (நடிக்கிற மாதிரியே இல்லியே, அர்ச்சனா!) கிண்டலாகச் சொல்லும்போது சந்தியா எப்படி "ரியாக்ட்' பண்ணுகிறாள் என்பதை நாசூக்காகக் கையாண்ட விதம், ஷாலினியின் அனாயாசமான நடிப்புத் திறனில் ஒரு சின்னத் துண்டு.
அவ்வளவுதான்!
இயக்குநர் டிடிஎஸ், "இவ்வளவுதான், இதற்கு மேல் வேண்டாம்...' என்று அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார். சிநேகிதிகளின் ஜாலி அரட்டைக் காட்சிகளும் அப்படித்தான்.
பணத்தாசை பிடித்த பன்னீர்செல்வத்தின் (காத்தாடி ராமமூர்த்தி) மகன் சந்தோஷ் (ரோஹன் அய்யர்) அப்பா திருடிய சந்தியாவின் தந்தையின் பர்சைத் திருப்பிக் கொடுக்க வரும்போது, அவளுக்கு பாய் ப்ரண்டாக நடிக்க ஒப்பந்தம் செய்து கொள்கிறான். பிறகு. நாடகத்தின் வேகம் ஃபார்முலா கார் ரேஸ் மாதிரி விறுவிறு-விறுவிறுதான். தான் மேற்படிப்புக்கு சிங்கப்பூர் சென்று அங்கே பார்ட் டைம் வேலை செய்து, சந்தியாவிடம் பணத்தைத் திருப்பிக்கொடுக்க வரும்போது இன்னும் சுறுசுறு என்று சூடு பிடிக்கிறது. அன்றைக்கு ஊடல், இன்றைக்கு உரசல். தன் பாய்-ஃபிரண்ட் தன்னிடமிருந்து ஒதுங்குகிறான் என்றதும், சிநேகிதனை இழந்த தனிமை, சந்தியாவை சைக்கியாட்ரிஸ்ட்டிடம் (ஹேமலதா) கொண்டு செல்கிறது.
""மனைவியை இழந்ததும் உன் அப்பா பிஸினஸில் தன் வாழ்க்கையைத் தேட ஆரம்பித்தார். நீயும் உன்னிடம் என்ன திறமை இருக்கிறது என்று யோசி. அதை வைத்துக்கொண்டு உன் வெறுமையை நிரப்பிக்கொள். உன்னால் சாதிக்க முடியும்...'' என்று சைக்கியாட்ரிஸ்ட்டிடமிருந்து சந்தியா ஆலோசனை பெற்றதும், தன்னுடைய இசைத் திறமையைத் தூசு தட்டிப் பளபளக்க வைத்து அதில் சந்தியா மன அமைதியும் வெற்றியும் காண்கிறாள். மீண்டும் அவள் வாழ்க்கையில் வருகிறான் சந்தோஷ். அவனுக்காக உதவிய மீதிப் பணத்தையும் அவளிடம் கொடுத்துவிட விரும்புகிறான். தன்னுடன் அவன் கொண்ட நட்பு வெறும் பணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தம் போலத்தான் என்று சந்தியா நினைத்து அவனை வெளியேறச் சொல்கிற போது, ""நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்று அறிவிக்கிறான்'' சந்தோஷ்.
எட்டிப் பாய்ந்து அவன் வாயை சந்தியா அடைக்கும்போது, அவர்களின் காதல் உறுதியாகி, வாழ்க்கையில் ஒரு புதிய ஆரம்பம் தொடங்க இருப்பதை மிகவும் கலகலப்பாகச் செய்து முடித்திருக்கிறார் கே.பி. கதை அவருடையதுதான்.
ஆனால் விவேக் ராஜகோபால் இந்தக் கதைக்கு எழுதியிருக்கும் வசனம், ஊறிய தயிர் வடையில் மூடியிருக்கும் முந்திரிப்பருப்பு, காராபூந்தி ரகம். அத்தனை மொறு மொறு. அபத்த நகைச்சுவை தவிர்த்த, வாய்விட்டுச் சிரிக்கவைக்கிற சுத்த சுயம்பிரகாசமான நையாண்டி நகைச்சுவை. அதிலும் சந்தியா-சந்தோஷ் சந்திக்கும்போதெல்லாம் நடிப்பா, நகைச்சுவையா எது முந்துகிறது என்ற துடிப்பு ரசிகர்களிடம் ஏற்படுகிறதே, அது சாமானிய சாதனை அல்ல. (ஆமாம், இத்தனை நாள் எங்கே ஒளிந்திருந்தார் இந்த வசன கர்த்தா)
பிக்-பாக்கெட் அடிக்கிற, சிகரெட்-மது குடிக்கிற, பொய்யைக்கூட நகைச்சுவையுடன் சொல்கிற, பணத்தின் மீது மட்டுமே குறியாய் இருக்கிற நெகட்டிவ் பாத்திரத்தில் யாரும் காத்தாடியை நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது. ஆனால், பாத்திரம் சின்னதோ, பெரிசோ அதிலிருந்து கரண்டி கரண்டியாக எடுத்துவழங்க காத்தாடி காரண்டி!
இந்த வசதி இருக்கும் எந்த இயக்குநரும் தானும் ஒரு படி அதிகம் தாண்டத்தான் நினைப்பார். டிடி சுந்தரராஜன் அதைத்தான் செய்திருக்கிறார். சங்கீதத்தில் சந்தியாவின் திறமை இருப்பதை ஊக்குவிக்கும் காட்சியைக்கூட கச்சேரி, கூட்டம் என்று மிகைப்படுத்தாமல் செய்திருக்கிறார்.
குமார் ஸ்டேஜின் செட்ஸ் பளிச்சென்று துடைத்து வைத்த மாதிரி இருக்கிறது. செட் டிசைன் பண்ணிய ஜி.கிருஷ்ணமூர்த்திக்கு (இங்கிருந்தபடியே) ஒரு கைகுலுக்கல். லைட்ஸ் கலை ரவியும் வெகு கவனம் எடுத்துக்கொண்டு, ஒரேயடியாக எல்லா விளக்குகளும் எரியாமல், மெல்ல மெல்ல அந்த விளக்குகள் உயிர் பெறுகிற மாதிரி கலை நயத்துடன் ஒளியைத் தூவவிடுவது பாராட்டுக்குரிய அம்சம்.
நாலு நாடகங்களுடன் நிறுத்திக்கொள்ளாமல், நிறைய இடங்களில் இ.கூ.அ. மழை பெய்யட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.